சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பல இடங்களில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவ்வப்போது காடுகளின் வழியாக ஊருக்குள் ஊடுருவி அரசியல் தலைவர்கள், எல்லைப் படை பாதுகாவலர்கள் ஆகியோர் மீது திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் சில நேரத்தில் பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று எல்லைப்படை பாதுகாவலர்கள், இந்தோ-திபெத்திய எல்லைப்படை காவலர்கள் மற்றும் அப்பகுதி காவல்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு படை வாகனத்தில் துபேடாவில் இருந்து நாராயன்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வாகனம் ஆனது அபுஜ் மத் பகுதியில் இருந்து கொட்லியார் கிராம சாலைக்கு வந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் வைத்த பகுதிகள் மீது வாகனம் சென்றதும் எதிர்பாராத விதமாக வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் இந்தோ- திபெத்திய எல்லைப்படையில் உள்ள இரண்டு ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த வீரர்கள் இருவரும் மராட்டிய,ஆந்திர பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இச்சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகிறது.