
மதுரை மாவட்டம் திருமங்கலம் ரோஜா தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹசீனாபானு என்பவரின் இரண்டரை வயது குழந்தை ஆலியா, விளையாட்டின் போது 2 ரூபாய் அமிர்தாஞ்சன் தைலம் டப்பாவை விழுங்க முயன்றது. ஹசீனாபானு வேலைக்கு சென்றதால், தனது தாய் மெகரசிபானுவிடம் குழந்தையை விட்டுவிட்டு சென்றிருந்தார். அப்போது, தைல டப்பாவை வாயில் வைத்துக் கொண்ட குழந்தை எதிர்பாராத விதமாக அதனை விழுங்க முயற்சித்தது. இதனால், டப்பா தொண்டையில் சிக்கிக் கொண்டு குழந்தை துடித்தது.
இதைக் கண்டு மெகரசிபானு அதிர்ச்சியடைந்து, உடனடியாக தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, ஆலியாவை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் சிவகரன் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு, 15 நிமிடப் போராட்டத்திற்கு பிறகு தொண்டையில் சிக்கிய டப்பாவை பத்திரமாக வெளியே எடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.
மருத்துவர் சிவகரன் கூறியதாவது, “தொண்டைக்கு உள்ளே தைல டப்பா செல்லாமல் வெளியே சிக்கியிருந்தது. அதனால், குழந்தை மூச்சுத்திணறல் அல்லது மூர்ச்சை போன்ற நிலை ஏற்படவில்லை,” என்றார். மேலும் மருத்துவர்கள் விரைந்து செயல்பட்டதால், சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டது.
குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், மருத்துவர் சிவகரனுக்கும், மருத்துவமனையில் சேவைபுரிந்த செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மருத்துவர்களின் சாதுர்யமான சிகிச்சையால், ஆலியாவின் உயிரை காப்பாற்ற முடிந்தது.