உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள கட்டார் ஜோட் கிராமத்தைச் சேர்ந்த பாப்லு என்ற தொழிலாளி, தனது மனைவி ராதிகா மற்றும் அவரது காதலர் விகாஸ் இடையேயான உறவை அறிந்தபின், தன்னையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் வகையில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். 2017ஆம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்ட பாப்லுவுக்கு, 8 மற்றும் 5 வயதுடைய இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டாக ராதிகா, அதே கிராமத்தைச் சேர்ந்த விகாஸுடன் மறைவாக பழகி வந்ததை பாப்லு உறுதி செய்தபின், சந்தேகம், வாதம், சண்டை என எதுவும் செய்யாமல், ராதிகா-விகாஸை சிவன் கோவிலில் திருமணம் செய்து வைத்தார். சட்டபூர்வமாக திருமண பதிவு செய்ய சாட்சியாக கையெழுத்திட்டார்.

இந்நிலையில், திருமணத்திற்கு சில நாட்களிலேயே விகாஸின் தாயார், ராதிகாவை மீண்டும் பாப்லுவிடம் அனுப்பி வைத்துள்ளார். “அந்த சிறுவர்கள் தாய் இல்லாமல் வளரக்கூடாது என்பதால் தான் ராதிகாவை திரும்ப அனுப்பினேன்,” என விகாஸின் தாயார் கூறியுள்ளார். இதையடுத்து, பாப்லு மீண்டும் தனது மனைவியை ஏற்றுக்கொண்டார்.

 

நாங்கள் குடும்பமாக வாழப்போகிறோம் என கூறியுள்ளார். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில், உத்தரப்பிரதேசத்தில் மீரட் மற்றும் ஓரையா ஆகிய பகுதிகளில் நடந்த இரு கொடூரக் கொலைகளும் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. மீரட்டில் முஸ்கான் என்ற பெண், தனது காதலர் சாகிலுடன் சேர்ந்து, கணவர் சௌரப்பை மருந்து கொடுத்து கொலை செய்து, உடலை துண்டித்து, ஒரு டிரம்மில் போட்டு சிமென்டால் மூடி பதுக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓரையாவில், திருமணமாகி இரண்டு வாரங்களிலேயே, 22 வயதான பிரகதி யாதவ் தனது காதலருடன் சேர்ந்து, தனது கணவர் திலீப்பை வேலிக்குள் வெட்டிக் கொன்ற சம்பவமும் நிகழ்ந்தது. இவ்வகை சம்பவங்களை அடிக்கடி கண்ட பாப்லு, தனது வாழ்க்கையை பாதுகாக்க, இந்த மாறுபட்ட முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.