
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் புதிய காலனி பகுதி உள்ளது. இப்பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற ஒரு மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நாய் விஷ்வாவை எதிர்பாராத விதமாக கடித்தது.
இதனால் சிறுவனுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவனது பெற்றோர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு சிறுவன் தீராத வயிற்று வலி மற்றும் தலைவலியால் வேதனை பட்டார். இதனால் சிறுவனின் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுவனை அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தினால் அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்து விட்டான். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுவனின் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.