
ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்திரபடா மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தண்டனை பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2023 அக்டோபர் 17 அன்று பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த 17வயது சிறுமி ஒருவர், தனது 18 வயது கல்லூரி மாணவியுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த கல்லூரி மாணவி ஜூஸில் மயக்க மருந்து கலந்து பன்னிரெண்டாம் வகுப்பு சிறுமிக்கு கொடுத்துள்ளார்.
அதனை வாங்கி குடித்த சிறுமி மயங்கி விழுந்ததும், கல்லூரி மாணவி தனது நண்பர்களான சூரியகாந்த சாஹூ மற்றும் சத்யரஞ்சன் சாஹூ ஆகிய இரண்டு பேருக்கும் தகவல் கொடுக்க, அங்கு வந்தவர்கள் மயக்க நிலையில் உள்ள சிறுமியை காரில் கட்டக்கில் உள்ள ஹோட்டலுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அக்டோபர் 18 அன்று வீடு திரும்பியதும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையில் கல்லூரி மாணவி உட்பட இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவியின் வயது 18 என்பதால் முதலில் சிறுவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் முழுமையான சாட்சிகளையும், ஆதாரங்களையும் அறிந்த கேந்திரபடா மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவிய பெண்ணுக்கு ரூபாய் 18000 அபராதமும் 20 வருட சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பளித்துள்ளது.
அந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு நிதியிலிருந்து ரூபாய் 7.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற இரண்டு குற்றவாளிகளுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.