எகிப்தின் வடகிழக்கு பகுதியில் சூயசை கலாலா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பல ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழகம் முடிந்தவுடன் மாணவர்கள் வீடு செல்வதற்காக பேருந்தில் ஏறி உள்ளனர். ஐன் சோக்னா நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்துள்ளது. இதில் 12 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சூயஸ் பகுதியில் இருந்து 28 ஆம்புலன்ஸ்கள் மூலம் படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. ஆனால் இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தை வெளியிடவில்லை. மேலும் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட படுகாயம் அடைந்தவர்களின் நிலை குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. இந்த விபத்து ஏற்படக் காரணம் என்ன என்பதை அந்நாட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.