சென்னை வியாசர்பாடி பகுதியில் இன்று காலை அதிர்ச்சிகரமான விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 8.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் நோக்கி ஒரு கார் மிகவேகமாக வந்தது. அதைக் கவனித்த மக்கள், அந்தக் காரை ஒரு சிறுவன் ஓட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வியாசர்பாடி மேம்பாலம் முடிவில் அந்தக் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து சாலையில் உருண்டது.

இந்நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று, காரில் சிக்கியிருந்த ஐந்து பேரையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர்களில் யாருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், வியாசர்பாடி மற்றும் புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காரை ஓட்டியவர் 18 வயது சிறுவன் என்பதும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காரில் இருந்தவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், சவுகார்பேட்டையில் வசித்து வருகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.