
அதிமுக கட்சி 2013ல் ஆட்சியில் இருந்த போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆட்சி காலத்தின் போது சேலம் மாவட்டத்தில் அத்தம்பட்டி பகுதியில் முனுசாமி கோரைப்பாய் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் ஆதிதிராவிட நலத்துறையில் ஆசிரியராக இருந்த வெங்கடேசன் என்பவரின் மூலம் முனுசாமி முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியனுடன் பழக்கமாகியுள்ளார்.இந்த பழக்கத்தின் மூலம் முனுசாமி அமைச்சரின் உதவியுடன் பல இடங்களில், பள்ளிகளில் பாய்கள் சப்ளை செய்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் ஆதிதிராவிட நலத்துறை வாரியத்தில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என முனுசாமியிடம் கூறியுள்ளார். இப்பணிக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை கொடுத்தால் பணியில் அமர்த்தப்படுவர் என முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்நிலையில் முனுசாமி தனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள் என பலரிடம் 65 லட்சம் ரூபாய் வரை வாங்கி கொடுத்துள்ளார். இந்த பணத்தை முனுசாமி தவணை முறையில் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியனின் மகளிடம் படிப்படியாக வழங்கியுள்ளார்.
இந்நிலையில் முனுசாமியிடம் வேலை வாங்கித் தருவதாக பல மாதங்களாக இழுத்தடித்து ஏமாற்றியுள்ளனர். முனுசாமி தான் அளித்த பணத்தை திரும்பித் தருமாறும் கேட்டுள்ளார். இதனால் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் பாதி பணத்தை கொடுத்துள்ளனர். மீத பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து முனுசாமி சேலம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த வழக்கு சேலம் ஊழல் ஒழிப்பு நலத்துறையிடம் மாற்றப்பட்டது. இதன்படி லஞ்சத்துறை அதிகாரி வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.