உத்தரப் பிரதேச மாநிலம் கன்பூரில் கொலை சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருமணம் செய்ய வேண்டிய மனப்பெண்ணின் வீட்டினர் வைத்த நிபந்தனையால் தனது சொந்த தாயை வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதான ப்ரமிலா சிங் என்பவர் தனது மகன் ராஜா சிங்குடன் வசித்து வந்துள்ளார். ராஜா ஒரு விவசாயியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

பத்து நாட்களுக்கு முன்னர் ப்ரமிலா சிங் வீட்டில் ஏற்பட்ட சிறிய தீவிபத்தில் காயமடைந்த நிலையில், தனது மகள் பிரீத்துவின் வீட்டில் தங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ராஜா சிங் தனது காதலியுடன் திருமணம் செய்ய விரும்பிய நிலையில், அந்த பெண்ணின் குடும்பம், வீட்டின் சொத்து ராஜா பெயரில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். ஆனால் ப்ரமிலா சிங், அந்த வீட்டை மகனுக்கு பெயர்மாற்றம் செய்ய மறுத்துவிட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

இதையடுத்து, ராஜா சிங் புதன்கிழமை காலை 9.45 மணிக்கு தனது சகோதரி வீட்டிற்கு வந்து, தூங்கிக் கொண்டிருந்த தாயை பலமுறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார். ப்ரமிலாவின் அலறல் சத்தத்தை கேட்டு, பிரீத்து அறைக்குள் ஓடி வந்ததும், தாயை இரத்தத்தில் மிதந்து கிடப்பதை பார்த்தார். உடனடியாக போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட ராஜா சிங்கிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.