
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடுக்கும் பிரசாதங்களில் அதிக பக்தர்கள் விரும்பி வாங்குவது லட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லட்டு தயாரிப்பில் மாமிச கொழுப்புகள் கலப்பதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது சந்திரபாபு நாயுடு ஆட்சியில் தான் லட்டு பிரசாதத்தின் தரத்தை மீட்டுள்ளதாகவும், தூய்மையான நெய்யை பயன்படுத்தி லட்டு தயாரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தரப்பில் கூறும்போது விஜயவாடா வெள்ள மீட்பு பணிகள் ஆகியவற்றில் ஏற்பட்ட தோல்விகளை திசை திருப்ப தற்போது திருப்பதி தேவஸ்தான பிரசாதம் குறித்து அவதூறு பரப்புகிறார்கள் என பதில் அளித்தனர். சந்திரபாபு நாயுடு அவரோடு குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சத்தியம் செய்ய தயாராக என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை எம்பியுமான சுப்பையா ரெட்டி சவால் விடுத்துள்ளார்.
இந்த சர்ச்சைக்கு நடுவே திருப்பதி லட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் மீன் எண்ணெய், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் ஆட்டு கொழுப்பு கலந்திருப்பதாக கூறியுள்ளனர். இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் புனிதமாக கருதும் திருப்பதி லட்டு தயாரிப்பில் இப்படிப்பட்ட சர்ச்சையை எழுப்பியது அரசியல் ஆதாயத்திற்காகவா அல்லது பக்தர்களின் உணர்வோடு விளையாடுவதாக கேள்வியும் உருவாக்கியுள்ளது.