மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் இளம் பெண்ணிடம் இளைஞர்கள் தவறாக நடந்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இந்தோர் சராஃபா என்ற பகுதியில் அனுதினமும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைப் விட கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. இந்தக் கூட்டத்தை பயன்படுத்தி சில இளைஞர்கள் மனசாட்சி இல்லாமல் இளம் பெண்களை தவறாக தொடுவதும், வன்முறையில் ஈடுபடுவதும் அப்பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் அன்றைய தினம் இரவு நேரத்தில் அப்பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் தனது சகோதரி மற்றும் நண்பர்களுடன் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இளைஞர் ஒருவர் அவரிடம் தவறாக நடந்து கொண்டார். அதோடு அந்த பெண்ணை பார்த்து அவர் தகாத வார்த்தைகளையும் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் நண்பர்கள் அந்த இளைஞர்களுடன் சண்டையில் ஈடுபட்டனர். இதனை பார்த்த வியாபாரிகள் தடுத்து நிறுத்திய நிலையில் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களின் அடிப்படையில் வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.