
நெல்லையில் பெயர் போன அல்வா கடையான இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்பதாக கடையின் உரிமையாளர் கவிதா புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கும், கடைக்கும் தொடர்பு இல்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
அக்கடையின் உரிமையாளர் என்று கூறப்படும் கவிதா சிங் என்பவரின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது. எனவே மாப்பிள்ளை வீட்டார் இருட்டுக்கடையை மகளுக்கு வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் கவிதா சிங்கின் சகோதரர் நயன் சிங்-கின் வழக்கறிஞர் என்ற பெயரில் நாளிதழ்களில் பொது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் இருட்டுக்கடை நயன் சிங்கிற்கே சொந்தம் என்றும், கிருஷ்ண சிங் மற்றும் பிஜிலி சிங் ஆகியோரின் உயில்களின்படி உரிமை அவருக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கவிதாவுக்கு கடையின் மீது எந்த தொடர்பும் இல்லை என்றும், அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் நயன் சிங்கின் வழக்கறிஞர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், உயிலின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சிங்கின் சகோதர நயன் சிங் கூறியதாவது, இருட்டுக்கடை தமக்கே சொந்தம், சட்டரீதியாக தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.