
செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்திக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த விபத்தில் சத்தியமூர்த்திக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்து சென்றனர். தற்போது சத்தியமூர்த்தி அவரது தாயின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும் வீடு கட்டி தரவும் கூறி சத்தியமூர்த்தி செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அளித்தார்.
பின்னர் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து இளைஞர் சத்தியமூர்த்திடை மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் நேரில் சந்தித்து அவருக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் தேவையான உபகரணங்களை வழங்கினார். மேலும் அவரிடம் குறைகளை கேட்டு அறிந்து வீடு கட்டிக் கொடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். தனக்கு வீட்டு மனை வழங்கி மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுத்த ஆட்சியர் அருண்ராஜுக்கு மாற்றுத்திறனாளி சத்தியமூர்த்தி மகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார் .