
ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் 40க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பஸ் சென்றுள்ளனர். அப்போது பஸ் ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது, டீ குடிப்பதற்காக பஸ்ஸை நிறுத்தி உள்ளனர். அப்போது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்சார கம்பி பஸ்ஸின் மேற்கூரையில் உரசியுள்ளது. இதன் காரணமாக பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனை அறியாத அகல்யா(20) என்ற பெண் டீ குடிப்பதற்காக பஸ்ஸில் இருக்கும் கம்பியை பிடித்து கீழே இறங்க முயற்சித்துள்ளார்.
அப்போது அவரது உடம்பில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற 2 பேரையும் மின்சாரம் தாக்கியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.