இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் பற்றி எப்போதும் விவாதங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக, சைவ மற்றும் அசைவ உணவுகள் ஒரே சமையலறையில் தயாரிக்கப்படுவது சில பயணிகளுக்கு சங்கடமாக இருக்கிறது. இந்நிலையில் டெல்லி – கட்ரா வழியாக இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் முதல் முழு சைவ உணவு வழங்கும் ரயிலாக செயல்படுகிறது. இந்த ரயிலில் முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட எந்தவொரு அசைவப் பொருளும் வழங்கப்படுவது கிடையாது.

ஏனெனில், இந்த ரயில் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்காக செயல்படுகிறது. இதன் காரணமாகத்தான் அந்த ரயிலில் அசைவ உணவுகள் வழங்கப்படுவது கிடையாது. இதேபோன்று ரயிலில் பயணிக்கும்  பயணிகளும் அசைவ உணவுகளை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பக்தர்கள் புனித பயணத்தின் போது எந்த வித சிக்கலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறையை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. மேலும் இதுபோன்று சைவ ரயில்கள் இனிவரும் காலங்களிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.