அமெரிக்காவில் செயல்படும் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமான பணிப்பெண் பாதுகாப்பு அறிவிப்புகளை வித்தியாசமான முறையில் அறிவித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், விமானத்தின் பணிப்பெண் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளை பயணிகளுக்கு விளக்கிவிட்டு. அதன் பின் நகைச்சுவையாக பயணிகளை ஈர்க்கும் வகையில் கேள்வி ஒன்றை கேட்டார்.

அதாவது ஆக்சிஜன் மாஸ்க் எங்கிருந்து கீழே வரும்? சரியாக அடையாளம் காட்டுங்க? என கேட்டதற்கு மூன்று பயணிகள் மட்டுமே சரியான பதிலை அளித்தனர். உடனே அந்த விமான பணிப்பெண் சூப்பர்! மூன்று பேருக்கு மட்டும்தான் ஆக்சிஜன் கிடைக்கப் போகிறது! என கிண்டலாக கூறினார்.உடனே பயணிகள் ஆரவாரம் செய்து சிரித்தனர்.

அதேபோல் குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மார்கள் ஒவ்வொருவரின் குழந்தைகளும் வித்தியாசமாக இருக்கும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வைத்திருந்தால் யாருக்கு முதலில் ஆக்சிஜன் மாஸ்க் கொடுக்கப் போறீங்க? யோசிச்சு பாருங்க… உங்களுக்கு பிடிச்சவங்க யாருன்னு சீக்கிரம் தேர்வு பண்ணுங்க! என நகைச்சுவையாக கூறியதும் பயணிகளிடையே பெரும் சிரிப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து வருகிறது. பாதுகாப்பு அறிவுறுத்தல்களின் போது இது போன்று நகைச்சுவையாக பயணிகளை ஈர்க்கும் வகையில் பேசுவது பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் இடையே நல்ல உறவை வளர்க்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிலர் இது பாதுகாப்பு அறிவுறுத்தல்களின் முக்கியத்துவத்தை குறைக்கக்கூடும் எனவும் விவாதிக்கின்றனர். தற்போது வரை ஸ்பிரிட் எயர்லைன்ஸ் இதுகுறித்து எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.