அரியானா மாநிலத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் நடந்த ஒரு கொடூர சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாபீர் மாலிக் என்ற வாலிபர் பீகாரை சேர்ந்தவர். இவர்  புலம்பெயர் தொழிலாளியாக அரியானா மாநிலத்திற்கு வேலைக்கு வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி அவர் மீது காவல் நிலையத்தில் மாட்டுக்கறி சமைத்து சாப்பிட்டதாக கூறி புகார் கொடுக்கப்பட்டது. அதாவது தன்னுடைய நண்பர்களுடன் அவர் தங்கி இருந்த குடிசையில் வைத்து மாட்டுக்கறி சமைத்ததாக கூறப்பட்ட நிலையில் உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறைச்சியை ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அன்றைய தினமே பசு பாதுகாப்பு கும்பல் அவரை தங்களுடைய இடத்திற்கு வரவழைத்துள்ளனர். அதாவது காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வருமாறு கூறி அழைத்துள்ளனர். இதை நம்பி அந்த வாலிபர் அங்கு சென்ற நிலையில் அவரை சரமாரியாக அடித்துள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து அவரை கொலை கொலை செய்த வாலிபர்கள் 5 பேரை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். இதற்கிடையில் அந்த வாலிபரை அவர்கள் கொடூரமாக அடித்து தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அரியானா மாநிலத்தில் பசுக்களை கொல்வதற்கும் அதை சாப்பிடுவதற்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி அங்கு அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.