
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூர் மாவட்ட ரயில் நிலையத்தில் அதிகாலை 3:30 மணி அளவில் ரயிலுக்காக சில பயணிகள் காத்திருந்தனர். இந்த நிலையில் அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் கான்கிரீட் போட வைத்த கட்டைகளை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியுள்ளார். இதை அங்கிருந்த பயணிகள் தடுக்க முற்பட்டபோது மேலும் அவர் கட்டையால் அங்கிருந்தவர்களை சரமாரியாக அடித்து விரட்டி உள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலில் சிக்கிய இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மயோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனைவரையும் தாக்கி விட்டு தப்பியோட முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது தான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.
அவர் பெயர் ஜெயக்குமார் கேவட்(45). இந்த சம்பவம் குறித்து ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இறந்த நபர்களுள் ஒருவர் தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணேஷ்குமார்(54) என்பது தெரிய வந்தது. மேலும் ஒருவர் யார் என ரயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.