புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பள்ளியில் அறிவியல் ஆசிரியர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு, அங்கிருந்த ஆசிரியர் மணிகண்டனை விரட்டி விரட்டி தாக்கினர்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் ஆசிரியரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளியில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உட்பட 18 கிராம மக்கள், 7 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கு சீல் வைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கலெக்டரின் உத்தரவுப்படி நேற்று நடைபெற இருந்த பத்தாம் செய்முறை தேர்வு ரத்து செய்யப்பட்டு, பள்ளியின் நுழைவாயில் பூட்டு போட்டு மூடப்பட்டது. இதனால் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களுக்கு மாற்று தேதியில் செய்முறை தேர்வு நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் எந்த நேரத்திலும் அதிகாரிகள் பள்ளிக்கு சீல் வைக்கலாம் என்றும் தெரிகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவி  வருகிறது