கேரள பெண்கள் மத மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் திட்டமிடப்பட்டு இணைக்கப்படுகின்றனர் எனும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் தான் தமிழ்நாட்டில் திரையரங்கங்கள் அப்படத்தை திரையிடவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில், இந்த படத்தை வெளியிடப்போவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவுகளுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை சென்ற 12-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு, மேற்கு வங்க மாநிலத்துக்கு நோட்டீஸ் பிறப்புத்ததோடு இந்த திரைப்படம் பற்றி நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தது. அதன் கீழ் இவ்வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் பிரமாண பத்திரத்தில் “தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படவில்லை. இந்த படத்தை காண பொதுமக்கள் யாரும் விரும்பி செல்லவில்லை. இதனால் திரையரங்குகளில் அப்படத்தை நீக்கிவிட்டு வேறு படத்தை திரையிடுகின்றனர். ஆகவே இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது” என தெரிவித்துள்ளது.