நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் ஊராட்சி மெயின் சாலையில் இருந்து மடத்தான் தெரு ரயில் நிலையம் செல்லும் வழியில் தொம்பை வாய்க்காலில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாக தான் மடத்தான் தெரு, சிக்கல் ஊராட்சி, புரவச்சேரி போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தரைப்பாலம் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து காணப்படுகிறது.

மேலும் பாலத்தின் இரு பக்கங்களிலும் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தும், மர செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் பாலம் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் பெரும்  விபத்து ஏற்படுவதற்கு முன்பாக இந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.