கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதற்கு பிறகு, பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து புகார் அளிக்கின்றனர். இந்நிலையில் தமிழில் தவமாய் தவமிருந்து, மிருகம், பொக்கிஷம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகை பத்மபிரியா. இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு ஒரு மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. அதன் பிறகு தான் இந்த ஹேமா கமிட்டி வந்தது. இதுகுறித்து நடிகை பத்மபிரியா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, கடந்த நான்கரை வருடங்களாக இந்த அறிக்கை மறைத்து வைத்தது ஏன்? யாருக்காக வெளியிடாமல் வைக்கப்பட்டது என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தலையும், முதுகெலும்பும் கிடையாது. இங்கு பவர் குரூப் இருக்கிறது, யார் மறுத்தாலும் அதுதான் உண்மை. தாங்கள் கைகளில் அதிகாரம் இருப்பதால் தான் இத்தகைய சம்பவம் நடைபெறுகிறது. தற்போது நடந்த இந்த பிரச்சனையை ஒரு பாலியல் பிரச்சினையாக மட்டுமே சினிமாத்துறையினரும், பொதுமக்களும் பார்க்கின்றனர். அவர்களுக்கு நடிகைகள் ஒரு சரக்கு மட்டுமே. எனக்கு மலையாளத்தில் திரைப்பட வாய்ப்புகள் திடீரென குறைந்து விட்டது. அதற்கு காரணம் என்னவென்று எனக்கு தெரியும், தயாரிப்பு நிர்வாகி ஒருவர் உங்களுக்கு வயதாகி விட்டதை நடிப்பதை நிறுத்தக் கூடாதா என்று கேட்டார். எனக்கு 26 வயது தான் ஆகிறது. இந்த கேள்வி எனக்கு அதிர்ச்சியை தந்தது என்று அவர் கூறினார்.