மும்பை ஒர்லியில் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் ஒன்று உள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்  மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் நடிகர் சல்மான்கான் ரூ.5 கோடி தர வேண்டும், இல்லை என்றால் அவரது கதி மோசமாகிவிடும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த கொலை மிரட்டலை அடுத்து சல்மான்கான் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதோடு குறுஞ்செய்தி அனுப்பியது யார் என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் அதே நம்பரில் இருந்து மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. அதில் சல்மான் கானை மிரட்டியதற்கு மன்னிப்பு கேட்டதுடன், தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த கொலை மிரட்டல் அனுப்பப்பட்ட நம்பரை வைத்து காவல்துறையினர் தீவிரானமாக விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் ஜார்கண்ட்டில் இருந்து இந்த மெசேஜ் வந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து ஜார்கண்ட் சென்றுள்ளது. இந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் பிஷ்நோய் கேங்கை சேர்ந்தவரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.