புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு காவல் சரகம் அனவயல் கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கர் (41) என்ற மகன் உள்ளார். பாஸ்கர் நீண்ட ஆண்டு காலமாக புளிச்சங்காடு கைகாட்டி கடைவீதியில் பேராவூரணி சாலையில் கட்டடத்தின் மாடியில் ஆண்களுக்கான ரெடிமேடு ஆடை கடை நடத்தி வந்துள்ளார்.

தற்போது தீபாவளி ஒட்டி பல பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான மாடல்களில் ரெடிமேடு ஆடைகளை இறக்குமதி செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி இரவில் நன்றாக மழை பெய்தது. அதனால் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பாஸ்கர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அடுத்த நாள் காலை கடையிலிருந்து புகையாக வருவதை மக்கள் சிலர் கவனித்து பாஸ்கருக்கு தகவல் கொடுத்தனர் மற்றும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற பாஸ்கர் கடையை திறந்து பார்த்தார். கடையை திறந்ததும் அவருக்கு பேரிடியாக இருந்தது. பல லட்சக்கணக்கில் தீபாவளிக்காக வாங்கிய துணிகள் கடையில் உள்ள பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து கருகி இருந்தது. சில துணிகளில் சில இடங்களில் தீ இன்னும் எரிந்து கொண்டிருந்ததால் அதனை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

பாஸ்கர் காவல்துறையிடம் தீ விபத்து தானாக நடைபெறவில்லை யாரோ என் கடையை எரித்துள்ளனர் என புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடை மின் கசிவு ஏதும் ஏற்பட்டு தீ விபத்துக்குள்ளானதா? அல்லது யாரேனும் தீ வைத்துள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த வீதியில் உள்ள மற்ற கடைகளில் சிசிடிவி கேமராவை பார்த்தனர் இதில் ஏதோ ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து பாஸ்கர் கடையில் எரிந்த சிசிடிவி கேமராவில் இருந்த ஹார்ட் டிஸ்கை சென்னைக்கு அனுப்பி 40 நாள் கழித்து அந்த ஹார்ட் டிஸ்கில் பதிவாகி இருந்த வீடியோவை திறந்து பார்த்தனர்.

அந்த வீடியோவில் பாஸ்கர் கூறியது போல அந்த இளைஞர் பாஸ்கர் கடைக்கு சென்று அங்குள்ள பணத்தை எடுத்துக்கொண்டு கடையை தான் வாங்கி வந்த பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரை தீவிரமாக தேடினர். இந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருடைய மகன் ராஜ்குமார் (25) தான் இந்த வேலையை செய்தது என தெரிய வந்தது.

அந்த சிசிடிவி வீடியோவின் அடிப்படையில் ராஜ்குமார்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர் தான் போதையில் செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இருப்பினும் ராஜ்குமார் கடைசியாக தனது செல்போனில் யார் யாரிடம் பேசி உள்ளார். எதற்காக கடையை தீ வைத்து கொளுத்தினார் என்ற விவரங்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஏதோ ஒரு விபத்தால் தீ பற்றி உள்ளது என எண்ணிய கடையை யாரோ ஒருவர் தெரிந்தே தீ வைத்து கொளுத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.