இணையவாசிகள் பலரும் பேருந்து, ரயில்களில் பயணிக்கும் போது ரீல்ஸ் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வலியுறுத்தி வருகின்றனர். இதேபோன்று சீன சுற்றுலா பயணி ஒருவர் இலங்கையை சுற்றிப் பார்ப்பதற்காக ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் கடந்த மார்ச் 9ஆம் தேதி நானு ஓயா – பதுல்லா என்ற ரயில் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தபோது இடல்கஷின்னா பகுதியில் உள்ள 19ஆவது ரயில் சுரங்கப்பாதை அருகில் ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது சீன சுற்றுலா பயணி ரயிலின் கதவிலிருந்து வெளியே தலையை நீட்டி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சுரங்க சுவரின் மீது மோதியதால் ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலை மற்றும் கால்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மீட்பு படையினரின் உதவியுடன் சுற்றுலாப் பயணி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் நடவடிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். ரயில், பேருந்துகளில் பயணிக்கும் போது கதவுகளில் ஏறியோ, வெளியே தலை, கை, கால்கள் போன்றவற்றை நீட்டியோ வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் மற்றொரு சீன பயணி ஒருவர் கொழும்பில் ரயில் பயணத்தின் போது வெளிக்காட்சிகளை படம்பிடிக்க முயன்ற போது ரயிலில் இருந்து விழுந்து உயிர் தப்பியுள்ளார். இதனை அடுத்து தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இலங்கையில் உள்ள சீன தூதரகம் கடந்த மார்ச் 10ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் “அதிக ஆபத்தான செயல்களில் சீன சுற்றுலாப் பயணிகள் ஈடுபட வேண்டாம். சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டிருந்தது.