
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால், அது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் திமுக சார்பில் கூட்டணி கட்சிகள் போட்டியிட இருப்பதால், தேமுதிக தனியாக இடைத்தேர்தலில் களமிறங்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.