காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவில் பேசியதற்காக அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு நீதிமன்றம் 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்து தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பு வந்த 24 ‌ மணி நேரத்திற்குள் நாடாளுமன்ற மக்களவை ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி இருக்கும் நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது.

இதற்கு தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட பிறகு இடைத்தேர்தல் நடத்துவதற்கு 6 மாதம் அவகாசம் இருக்கிறது. ராகுலுக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்தாலும் மேல்முறையீட்டுக்காக நீதிமன்றம் 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் கோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். மேலும் வயநாடு தொகுதியில் தற்போது தேர்தல் நடத்துவதற்கு எந்த அவசரமும் கிடையாது எனக் கூறியுள்ளார்.