கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் போத்தா பகுதியில் பெடரல் பேங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பேங்கில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணி அளவில் ரூபாய் 15 லட்சம் மர்ம நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின் படி சாலக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனை நடத்தியதில், மர்ம நபர் ஒருவர் கண்ணாடிகளை உடைத்து கொள்ளையடிக்கும் காட்சியும் அதன் பின் அவர் தனது பைக்கில் தப்பி சென்ற காட்சிகளும் பதிவாகியிருந்தது. இதனை அடுத்து அந்த மர்ம நபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் யார் என தெரியாமல் இருந்தது.

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் தெரிய வந்ததாவது, சிசிடிவி காட்சிகளின் படி கொள்ளையர் பயன்படுத்திய பைக் பதிவெண்ணும் போலி என்பதால் அந்த மாடல் பைக் நடமாட்டத்தை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர். குறிப்பாக பேங்கிற்கு எதிரே உள்ள தேவாலயத்திற்கு இந்த மாடல் பைக்குகளை யாரெல்லாம் கொண்டு வருகின்றனர் என்பதை சோதனை செய்துள்ளனர். மேலும் தேவாலயத்திற்கு அடிக்கடி வரும் நபர்கள் குறித்த விவரங்களும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர். இந்த விசாரணையில் ரிஜோ ஆண்டனி என்பவர் அடிக்கடி தேவாலயத்திற்கு இந்த பைக்கில் வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதன் பின் ரிஜோ ஆண்டனியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் பேங்கில் கொள்ளையடித்ததை ஆண்டனி ஒப்புக்கொண்டார். இதில் குற்றவாளியான ஆண்டனி அதிர்ச்சி அடையும் வாக்குமூலத்தையும் அளித்துள்ளார். இதில், தேவ ஆலயத்திற்கு எதிரே உள்ள வங்கியை அடிக்கடி தேவாலயத்திற்கு செல்வது போல தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும் வாடிக்கையாளர்கள் குறைவாக இருக்கும் நேரத்தை கணக்கிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அதற்காக தனது வண்டிக்கு போலீ வாகன எண்ணை உருவாக்கி பொறுத்திருப்பதாகவும் கூறினார்.

ஆனால் பைக்கின் அடையாளம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதை மறந்துள்ளார். வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் ரிஜோ ஆன்டனி மனைவி வெளிநாட்டில் பணிபுரிகிறார். இந்த நிலையில் அவர் அனுப்பிய பணத்தில் ஆடம்பரமாக செலவு  செய்ததால் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை கடனாகியுள்ளது. அடுத்த மாதம் மனைவி வெளிநாட்டில் இருந்து திரும்புவதால் மனைவிக்கு தெரியாமல் அனைத்து கடன்களையும் அடைத்து விட பேங்கில் கொள்ளை அடிக்க திட்டம் திட்டி உள்ளார் என்பதும் இந்த விசாரணையில் தெரியவந்தது.

மேலும் வங்கி கவுன்டரில் 45 லட்சம் ரூபாய் இருந்ததாகவும் தனக்குத் தேவையான 15 லட்சம் ரூபாய் மட்டுமே எடுத்ததாகவும் அப்பாவியாக கூறியுள்ளார் ஆண்டனி.இதனை அடுத்து காவல்துறையினர் ரிஜோ ஆண்டனி கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.