கொல்கத்தா முகுந்தபுர் பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் வீட்டில் வயதான தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 66 வயதான டுலால் பால் மற்றும் 58 வயதான அவரது மனைவி ரேகா பால் ஆகியோர் தங்கள் வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.

அவர்களது மகன் மற்றும் மனைவி வேலைக்கு சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், தம்பதிகள் தற்கொலை செய்துகொண்டதாகவும், இது குறித்து எழுதியிருந்த கடிதத்தில் தங்கள் மரணத்திற்கு மகனும் மருமகளும் காரணம் என குற்றஞ்சாட்டியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை காலை குடும்பத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரவு நேரத்தில் வீட்டில் யாரும் கதவையும், தொலைபேசிக்கும் பதிலளிக்காததை அடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிழக்கு ஜாதவ்பூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உள்ளே பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து நுழைந்து பார்த்தபோது, டுலால் பால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

அவரது மனைவி ரேகா பால் படுக்கையறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவர்கள் நாராயணி ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தம்பதிகள் தங்கள் மகனுடன் வாழ்ந்து வந்தனர். மகன் ஒரு பிசியோதெரபிஸ்ட் ஆகவும், மருமகள் ஒரு துணி உற்பத்தி நிறுவனத்தில் தையல்காரியாகவும் வேலை பார்த்து வந்தனர்.

போலீசார் உறவினர்களிடமும், அண்டை வீட்டார் இடமும் இருந்து பெற்ற தகவலின்படி, இந்த தம்பதிகளுக்கும், மகன்-மருமகளுக்கும் இடையில் இடைவிடாத சண்டைகள் நடைபெற்று வந்ததைக் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக அந்த நாள் காலை ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையானதாக இருந்தது எனக் கூறப்படுகிறது. தற்கொலை குறிப்பு மற்றும் உறவினர்களின் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, மகன் மற்றும் மருமகளை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.

மேலும் மகன் மற்றும் மருமகளுக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சடலத்துக்குப் பின்னர் மேற்கொண்ட பிரேத பரிசோதனையில், இரண்டு பேரும் தூக்கில் தொங்கியதனால் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், உடலில் வேறு எந்தக் காயங்களும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.