யுகே- வில் டாமியன் வோஜ்னிலோவிச் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வேல்ஸ் நகரில் வேலைக்கு சென்ற பெண்ணின் வீட்டை உடைத்து திருட சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் எந்தவிதமான திருடிலும் ஈடுபடவில்லை. மாறாக வீட்டில் உள்ள குப்பைகளை அகற்றி குப்பை தொட்டியை சுத்தமாக்கிவிட்டு வீட்டை பெருக்கியதோடு மட்டுமல்லாது மாஃப் போட்டு வீட்டை சுத்தமும் செய்துள்ளார். பின்னர் வீட்டில் உள்ள பறவைகளுக்கு தீனி வழங்கி காய்கறிகளை முறையாக அடுக்கி வைத்துவிட்டு ருசியான உணவையும் சமைத்துள்ளார்.

பின்னர் அந்த வீட்டிலேயே குளித்து விட்டு தன்னுடைய துணிகளை துவைத்து காய வைத்துள்ளார். அது காய்வதற்குள் உணவருந்தி விட்டு வைன் அருந்தி பாட்டிலையும் காலி செய்து அலமாரியில் அடுக்கி வைத்துள்ளார். இதனையடுத்து காய்ந்த தன்னுடைய துணிகளை அணிந்து கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்ட திருடன் ‘கவலைப்படாதே சாப்பிட்டு  சந்தோசமாக இரு’ என்ற குறிப்பையும் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெண் வீட்டின் கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அந்த பெண் எனது சொந்த வீட்டிலேயே இருக்க எனக்கு பயமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

இதில் முதல் முறை திருட சென்றதற்குப் பிறகு 2 வாரங்கள் கழித்து நியூ போர்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் அதே போன்ற நடவடிக்கையில் திருடன் டாமியன் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் செக்யூரிட்டி கேமராவை தங்களுடைய மொபைல் போனுடன் கனெக்ட் செய்து வைத்திருந்ததால் வீட்டிற்கு திருடன் வந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். பின்னர் உறவினருக்கு தகவல் கொடுத்து காவல்துறையில் புகார் அளித்ததன் பெயரில் டாமியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் டாமியன் நீதிமன்றத்தில் நான் 2 வீட்டில் செய்த நடவடிக்கைகளை ஒப்புக்கொள்கிறேன் எனவும், சிறு வயது முதலே தங்குவதற்கு வீடு இல்லாத காரணத்தினால் அப்படி நடந்து கொண்டேன் எனவும் அதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் அடைந்த மன அச்சத்தை காரணம் காட்டி நீதிமன்றம் அவருக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.