ஹரியானாவில் வசிக்கும் ஹிமான்ஷி காபா என்ற பெண் லிங்க்டுஇன் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் நானும் எனது சகோதரியும் சந்தைக்கு சென்றிருந்தோம். அப்போது எனது சகோதரியின் செல்போன் திருடப்பட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் செல்போன் எடுத்தவரை டிராக் செய்யாமல் எங்களை கேள்வி எழுப்பினர். அதாவது ஒருவர் எப்படி தங்கள் போனை இழக்க முடியும், உங்கள் போனை தொலைத்த போது ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீங்கள் யோசித்து இருக்க வேண்டும், இப்போது ஏன் எங்களிடம் வந்திருக்கிறீர்கள். இதில் நாங்கள் என்ன செய்ய முடியும், நீங்கள் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

நாங்கள் போனை கண்காணித்து வருவதாகவும், அது அருகில் இருப்பதாகவும் அவர்களிடம் தெரிவித்தோம். அப்படியானால் நீங்களே போய் கண்டுபிடிங்கள் என்று பதில் அளித்தனர். பின்னர் அதிர்ஷ்டவசமாக திருடன் எங்களை தொடர்பு கொண்டு சிறிது பணம் கொடுத்தால் அதற்கு பதிலாக செல்போனை திருப்பித் தருவதாக கூறினார். எங்களுக்கும், திருடனுக்கும் இடையே மிகவும் சுமுகமான ஒத்துழைப்பு இருந்தது. இறுதியாக எங்கள் செல்போனை திரும்ப பெற்றுக் கொண்டோம். அன்புள்ள ஹரியானா காவல்துறையினரே, திருடர்கள் உங்களை விட அதிக ஒத்துழைத்து தருகிறார்கள் என்று அதில் பதிவிட்டிருந்தார். இப்பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி, பல ஆதரவான பதிவுகளையும் பெற்று வருகிறது.