கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷி வந்தியத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆரோக்கியசாமி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இதனையடுத்து இரவு நேரத்தில் குடும்பத்தினர் ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டு கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு ஆரோக்கியசாமி அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து ஆரோக்கிய சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.