பெண்கள் மேஜிக் சர்க்கிள் அமைப்பில் உறுப்பினர்களாக சேர அனுமதிக்கப்படாத காலத்தில், கடந்த  1991ஆம் ஆண்டு, சோஃபி லாயிட் என்ற பெண்  ‘ரேமண்ட் லாயிட்’ என்ற  பெயரில் மாறுவேடமிட்டு மேஜிக் தேர்வை வென்று உறுப்பினராக சேர்ந்தார். பாடிசூட், விக் மற்றும் கையுறைகளை அணிந்து தனது அடையாளத்தை மறைத்து தேர்வில் வென்றார்.

ஆனால், பின்னர் பெண்கள் சேர அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது உண்மை அடையாளத்தை வெளிப்படுத்திய போது, அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மேஜிக் வட்டம் சோஃபி லாயிட்டைத் தேடி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது நிலையை அங்கீகரித்து, இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை அறிவித்தது. அதில்  “இன்று அந்த தவறை திருத்துகிறோம்” என்று அமைப்பு தெரிவித்தது.

 

View this post on Instagram

 

A post shared by The Magic Circle (@magiccirclehq)

அதன் பின் சோஃபி லாயிட் தற்போது அதிகாரப்பூர்வமாக தனது உறுப்பினர் சான்றிதழைப் பெற்றுள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, “நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார். மேஜிக் வட்டத்தின் முதல் பெண் தலைவர் லாரா லண்டன் கூறுகையில், “சோஃபியை பெண் மந்திரவாதிகளுக்கான முன்மாதிரியாக ஏற்று, நாங்கள் இப்போது முற்றிலும் திறந்த அமைப்பாக மாறியுள்ளோம் என்பதைக் காட்ட விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

1980களில் லண்டனில் மைம் பயின்றபோது, மேஜிக் வட்டத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதை அறிந்து, தனது தோழி ஜென்னி வின்ஸ்டன்லியுடன் ஆலோசித்து சோஃபி இந்த மாறுவேட முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.