சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் முதியவர்கள் இயக்கும் மீன்பாடி வண்டிகளை குறிவைத்து திருடி வந்த ஷேக் அய்யூப் (37) என்ற நபரை செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இளநீர் வியாபாரி கலியபெருமாள் (61) என்பவரிடம், பெரம்பூர் பகுதிக்கு வண்டி மூலம் செல்ல வேண்டுமென கூறி அழைத்துச் சென்ற அவர், பாதியில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4,000 பணத்தையும், வண்டியையும் பறித்துச் சென்றார்.

கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஷேக் அய்யூப்பை வண்ணாரப்பேட்டையில் வைத்து கைது செய்தனர். விசாரணையின் போது, ஷேக் அய்யூப் முதியவர்களை குறிவைத்து வாடகைக்கு அழைத்து சென்று, மிரட்டி அவர்களிடம் இருந்து மீன்பாடி வண்டி மற்றும் பணத்தை பறித்து வந்ததாக தெரிவித்தார்.

செம்பியம், திரு.வி.க.நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து வண்டிகளை திருடி, கோயம்பேடு பகுதியில் ரூ.3000 முதல் ரூ.5000 வரை விற்றுவந்ததும் தெரியவந்தது. மேலும், இந்த திருட்டுப் பணத்தை ஆன்லைனில் ரம்மி விளையாட பயன்படுத்தியதும், அவர்மீது ஏற்கனவே ஐந்து குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், கோயம்பேடு பகுதியில் அவர் விற்ற 11 மீன்பாடி வண்டிகளை செம்பியம் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஷேக் அய்யூப்பை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துள்ளனர். அவரது தொடர்ச்சியான குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு தற்போது போலீசார் உதவிக்கரமாக செயல்பட்டு வருகின்றனர்.