
மகாராஷ்டிரா மாநிலம் அம்கே கிராமத்தைச் சேர்ந்த பிரப்பா சித்தப்பா டோனி, செம்மறி ஆடுகளை மேய்க்கும் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் முழுவதும் மேய்ச்சல் தொழிலையே, வாழ்வாதாரமாக கொண்டிருந்தது.
ஆனால், பிரப்பா தனது கனவுகளை விட்டுவிடவில்லை. UPSC 2024 சிவில் சர்வீசஸ் தேர்வில் 551வது இடத்தைப் பிடித்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு என மூன்றையும் அடிப்படையாய் கொண்டு தனது கனவை நனவாக்கியுள்ளார்.
பிரப்பா தனது பொறியியல் பட்டம் பெற்ற பின் இந்தியா போஸ்ட் ஆபீஸில் சிறிது காலம் பணியாற்றினார். ஆனால் அவரது கனவு, பெரிய அளவில் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்பது தான், அவரை வேறு பாதையில் அழைத்துச் சென்றது.
இரண்டு முறைகளில் தோல்வி கண்ட பிறகும் தளராத மனதுடன் மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார். அவர் தனக்குப் பிடித்த துறையான IPS-ஐ தேர்வு செய்திருக்கிறார், மேலும் காவல் துறையில் சேவை செய்யவேண்டும் என்பதே அவரது தற்போதைய இலக்காகும்.
551வது ரேங்க் பெறப்பட்டது என்ற செய்தி வெளியானதும், அவரது கிராம மக்கள் சந்தோஷத்தில் அந்தந்த மேய்ச்சல் நிலத்திலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். UPSC என்ற வார்த்தையே தெரியாத பாட்டி-தாத்தாக்கள், “நம்ம பையன் பக்கா அதிகாரி!” என கூறும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“அவன் தினமும் கடுமையாக உழைத்தான், ஒருநாள் இது வரும்னு நம்பினோம்” என தந்தை சித்தப்பா பெருமையாக கூறுகிறார். பிரப்பாவின் சாதனை, வெறும் தனிப்பட்ட வெற்றி அல்ல; அது அவரது சமூகத்திற்கு ஒரு பெருமை, மற்றும் இன்னும் பல இளைஞர்களுக்கு ஒரு உந்துசக்தி. “என்னால் முடியுமா?” எனக் கேட்பவர்களுக்கு, “முயற்சி இருந்தா முடியும்” என பதிலளிக்கும் வாழ்நாள் எடுத்துக்காட்டு தான் பிரப்பா டோனி.