சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் வழியில், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் 9 வயது ரயான் என்ற சிறுவன் விழுந்து வலியுடன் துடித்துக்கொண்டிருந்தார்.

இந்தக் காட்சியைப் பார்த்த 30 வயதான கண்ணன், யாரையும் எதிர்பார்க்காமல் தனது பைக்கை கீழே போட்டு, சிறுவனை காப்பாற்ற விரைந்தார். புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன், சம்பவ இடத்தில் தேங்கி கிடந்த நீரில் மின்சாரம் பாய்ந்து இருந்ததை தெரிந்தும், சிறுவனை விரைவாக இழுத்து வெளியில் கொண்டு வந்தார்.

 

அப்போது அருகில் இருந்த பலரும் பயத்தில் எதுவும் செய்யாத நிலையில், கண்ணன் மட்டும் தண்ணீரில் இறங்கியதால், அவரது தைரியம் பெருமையாக பேசப்படுகிறது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரயான் தற்போது நிலையான உடல்நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த செயலுக்காக, கண்ணனின் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் அவருக்காக சிறிய பாராட்டு விழாவொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதில் கண்ணன் கூறிய வார்த்தைகள் அனைவரது இதயத்தையும் தொட்டன: “நாம் உயிருடன் இருக்கிற வரைக்கும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யக்கூடாதா?” என்ற அவரது உருக்கமான குரல், சமூகத்தில் மனிதத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.