
திருவனந்தபுரத்தில் ஆட்டுக்கால் பொங்கல் வைப்பதற்காக மாநில முழுவதும் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மணக்காடு ஜும்மா மசூதி தங்குமிடம், குடிநீர் மற்றும் கழிவறை போன்ற பல வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தது. அதோடு விழாவிற்காக வந்த ஓட்டுநர்களுக்கும், தனியாக தங்குமிடம் மற்றும் வாகனம் நிறுத்தும் இடம் போன்ற பல வசதிகள் செய்ததாகவும், காவல்துறையினருக்கு தங்குமிடமாக ஒரு அறை ஒதுக்கப்பட்டதாகவும் நிர்வாகிகள் கூறினர். இந்த செயல்பாடு மத நல்லிணக்கத்தின் சிறந்த உதாரணமாக காணப்படுகிறது.
இது தொடர்பாக மசூதியின் நிர்வாகி “நாங்கள் வழக்கமாக பக்தர்களுக்கு உணவு வழங்குவோம், ஆனால் இந்த ஆண்டு ரமலான் நோன்பு காரணமாக காலை உணவு அளிக்க முடியவில்லை, எனினும் நேற்று மாலை நோன்பு திறந்த போது பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்றார். இதேபோன்று திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட் ஜோசப் மெட்ரோபாலிடன் கதட்ரல் தேவாலயமும் இந்த விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது.
இதைத்தொடர்ந்து பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் இந்த பகவதி அம்மன் திருக்கோவிலில் வைக்கும் ஆட்டுக்கால் பொங்கல் திருவிழாவில் கேரளா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து இந்த விழாவில் பங்கேற்கின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பகவதி தேவிக்கு அர்ப்பணமாக இந்த திருப்பணியை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பக்தர்களுக்கு மசூதி மற்றும் தேவாலயங்கள் உதவியது மத நல்லிணக்கத்தின் சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது.