திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் தேரடி தெரு அருகே கீழப்பத்தனேரியை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவின் வழியே சென்று கொண்டிருந்தபோது கீழே 10 கிராம் மதிப்புள்ள தங்க தாலி செயின் ஒன்று கிடந்துள்ளது.

அதனை எடுத்து உரிய நபரிடம் ஒப்படைக்கும் எண்ணத்தில் நாங்குநேரி காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்துள்ளார். அதன் பின் நாங்குநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது விசாரணை மேற்கொண்டதில் அந்த தங்க தாலியின் உரிமையாளர் அப்பகுதியை சேர்ந்த சுபா (31) என்ற பெண்மணி என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து நாங்குநேரி இன்ஸ்பெக்டர் அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து தங்கத் தாலியை பத்திரமாக மீட்டுக் கொடுத்த வேல்முருகன் மூலமாக சுபாவிடம் ஒப்படைத்தார். இதேபோன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடி தளவாய் புரத்தை சேர்ந்த எட்வின் (40). தளவாய்புரம் மெயின் ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது 20,000 பணம் கீழே கிடப்பதை கவனித்து அதனை பணகுடி காவல் நிலையத்திற்கு சென்று நேர்மையான முறையில் ஒப்படைத்தார்.

அதன் பின்னர் பணகுடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் விசாரணை மேற்கொண்டதில் அந்த பணத்தின் உரிமையாளர் தளவாய்புரத்தைச் சேர்ந்த லீலாவதி(50) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து பணகுடி காவல் நிலையத்திற்கு லீலாவதியை நேரில் வரவழைத்து எட்வின் மூலமாக இன்ஸ்பெக்டர் பணத்தை லீலாவதியிடம் ஒப்படைத்தார்.

இந்த சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன், வேல்முருகன். எட்வின் ஆகிய இருவரையும் நேரில் வரவழைத்து அவர்களது நேர்மையை பாராட்டும் விதமாக பொன்னாடை அணிவித்து நற்சான்றிதழ் வழங்கினார். மேலும் இந்த நற்செயலை ஊக்குவிக்கும் நோக்கில் இருவருக்கும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.