
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 34 ஆயிரத்து 790 நியாய விலை கடைகளிலும் கட்டாயமாக அனைத்து அட்டைதாரர்களுக்கும் அச்சடிக்கப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியதாவது, இனி தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் மக்களுக்கு பொருட்களை வழங்கும் போது அதற்கான ரசீதுகளை வழங்க வேண்டும் என்றும், இவற்றை வழங்குவதற்கான காகிதங்கள் பிப்ரவரி மாதம் வரை நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை தொடர்ந்து வழங்க, தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திடம் இருந்து காகிதங்களை கொள்முதல் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள இருப்பின்படி மே மாதம் வரை காகிதங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நியாயவிலை கடைகளில் அச்சடிக்கப்பட்ட ரசீது வழங்கப்படுகிறதா என்பதை மத்திய அரசு கண்காணித்து கொண்டிருக்கும் என்றும், ஊழியர்கள் தங்களுடைய பணிகளை சரிவர செய்து முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.