
தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஆண்டு சிவராத்திரி நாளில் சனிப்பிரதோஷமும் வருவதால் அதற்கான பூஜைகளும் நடைபெற உள்ளதால் சிவராத்திரி விழா அன்று மாலை 3.30 மணி முதல் சுவாமி, அம்பாள் மற்றும் நந்திக்கு பூஜைகள் நடக்கிறது. மேலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சனிப்பிரதோஷத்துக்கான பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் 4 கால பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து இரவு 10 மணி, நள்ளிரவு 12 மணி, மறுநாள் அதிகாலை 2 மணி மற்றும் 5 மணி போன்ற 4 கால பூஜைகளும் நடத்தப்பெற உள்ளது. இந்நிலையில் பூஜை நடைபெறுவதற்கு 1 மணி நேரத்துக்கு முன் அபிஷேகம் நடைபெறும்.
எனவே இந்த பூஜைகளை அனைத்து பக்தர்களும் கண்டு இறைவனின் அருளாசீர் பெறுவதற்கு வசதியாக மற்றும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் வரிசை முறை அமல்படுத்தப்படுகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, விரதம் இருப்பவர்கள் அமருவதற்கான வசதி, வாகனம் நிறுத்தும் இட வசதி போன்றவை கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏற்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று விரதம் இருக்கும் பக்தர்கள் தவிர மற்ற பக்தர்களுக்கு பால் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் உபயதாரர்களின் மூலம் கோவில் நிர்வாகத்தின் அனுமதி பெற்று வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தெரிவித்துள்ளார்.