தலைநகர் டெல்லியில் உள்ள மேலூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்தில் 45 வயது உடைய நபர் மெட்ரோ ரயில் கட்டிடத்தின் மீது தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்த சிலர் மேலூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து அறிந்த காவல்துறையினர், மெட்ரோ அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள், CISF  வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டிடத்தின் மேல் தொங்கிக் கொண்டிருந்த நபரை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக  மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் அந்த நபரை கயிறுகளால் மீட்க பலமுறை முயற்சி செய்தனர்.

இருப்பினும் அவர் எதிர்பாராத விதமாக மேலிருந்து கீழே வேகமாக குதித்தார். கீழே விழுந்த அவரை உடனடியாக அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் காயமடைந்த நபர் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் டெல்லியில் உள்ள காட்பாரியா சராய் பகுதியில் வசித்து வந்த விக்ரம் சர்மா என்பது தெரியவந்தது.

மேலும் அவர் ஹரியானா குருகுராமில் உள்ள இம்ஃபினெரா நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து மீட்கப்பட்ட கைபேசி, தொலைபேசி எண்கள் எழுதிய சிறு காகிதம் ஆகியவற்றின் மூலம் அவரது வீட்டிற்கு தொடர்பு கொண்டு  நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த விக்ரம் சர்மாவிற்கு டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.