சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர், தாம்பரம்,கொண்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் திடீர் டிக்கெட் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முறையற்ற பயணங்களை தடுக்கும் பொருட்டு 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை “ஒரு கோடி கிளப்” என்ற புதிய நடைமுறையை தெற்கு ரயில்வே ஏற்படுத்தியது. இதில் 2022-2023 ஆம் நிதி ஆண்டில் ஒரு கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் கிளப்பில் சேர்க்கப்படுவார்கள். இந்நிலையில் சென்னை கோட்டத்தைச் சேர்ந்த 3 டிக்கெட் பரிசோதகர்கள் 1 கோடிக்கு மேல் அபராதம் வசூலித்து சாதனை படைத்தனர்.

அதாவது சென்னை கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் எஸ்.நந்தகுமார் 1 கோடி 55 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தார். இதனையடுத்து சென்னை கோட்டத்தின் தலைமை டிக்கெட் பரிசோதகர் ரோசலின் ஆரோக்கியமேரி 1 கோடியே 3 லட்ச ரூபாய் அபராதம் வசூலித்து இந்திய ரயில்வேயில் முதல் முறையாக அதிக அபராதம் வசூலித்த பெண் டிக்கெட் பரிசோதகர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் முதுநிலை டிக்கெட் பரிசோதகர் சக்திவேல் 1 கோடியே 10 லட்ச ரூபாய் அபராதம் வசூலித்துள்ளார்.