
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் இன்று பொறுப்பேற்க உள்ளார். இந்த விழா தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. வழக்கமாக அதிபர் பதிவு பதவி ஏற்பு விழா பாராளுமன்றத்திற்கு முன்பு நடைபெறும், ஆனால் கடுமையான குளிர் நிலவுவதால் பாராளுமன்றத்திற்குள் ரோடுண்டா என்ற பகுதியில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் டிரம்ப் புளோரிடாவில் இருந்து வாஷிங்டனுக்கு தனி விமானத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் நேற்று முன்தினம் சென்றடைந்தார்.
அவர் சென்ற விமானத்தில் ஸ்பெஷல் மிஷன் 47 என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த பதிவு ஏற்பு விழாவின் கருப்பொருள் நமது நீடித்த ஜனநாயகம் ஒரு அரசியலமைப்பு வாக்குறுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் அதிபர் பதவி ஏற்பதற்கு முன்னதாக, ஜோபைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருடன் தேநீர் அருந்துவார். அதன் பின் பாராளுமன்றத்திற்குள் செல்வார்.
இந்த பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாஷிங்டனில் ஆதரவாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்துள்ளனர். டிரம்ப் பதவியேற்ற பிறகு, முதல் நாளில் எந்த உத்தரவுகளில் கையெழுத்து விடுவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குடியேற்றம் தொடர்பாக புதிய உத்தரவு வெளியாகலாம்.