
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் வசித்து வருபவர் ஷெர்லின் பெல்மா (44). ஷெர்லின் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாயார் மேரியுடன் வாழ்ந்து வருகிறார். இவர் கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி அன்று ஷெர்லின் பெல்மா வழக்கம் போல பள்ளிக்குப் புறப்பட்டு சென்றார். அவர் சென்றதை அடுத்து அவரது தாயார் மேரியும் வெளியே செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
அந்த நேரம் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து விட்டு வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். வீட்டிற்கு திரும்பிய தாயார் மேரி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து மேரி அதியமான் கோட்டை காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் வீடு முழுவதும் சோதனை செய்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி சென்றனர்.
இதனை அடுத்து இந்தத் திருட்டு வழக்கு குறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சேலத்திலிருந்து பதிவு எண் இல்லாமல் வேகமாக சென்ற காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் இருந்த 3 பேரை விசாரணை நடத்தியதில் அவர்கள் 3 பேரும் சந்தேகம் படும்படி பதிலளித்ததால் அவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் அவர்களது காரில் சோதனை நடத்திய போது பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மூவரும் திருநெல்வேலி சேர்ந்த சுரேஷ்(34), கார்த்திக்(25), அம்பாசமுத்திரம் பகுதி சேர்ந்த துர்கா நம்பி(25) என தெரியவந்தது. இதனை அடுத்து மூன்று பேரும் இணைந்து ஷெர்லின் பெல்மா வீட்டில் 100 பவுன் நகை, பணத்தை திருடியதும், இவர்கள் தொடர்ந்து இதுபோன்று கொலை, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருவதும், இவர்கள் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் காவல்துறை விசாரணையில் வெளிவந்தது.
இதனை அடுத்து மூன்று பேரின் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் அவர்களிடமிருந்து 30 பவுன் நகை, கார், பட்டாக்கத்தி மற்றும் சில ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஆசிரியர் வீட்டில் திருடிய வழக்கில் மேலும் 4 பேருக்கு தொடர்புள்ளது என விசாரணையில் தெரிய வந்ததால் காவல்துறையினர் தனிப்படை அமைத்து மற்ற 4 நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.