
உத்திரமேரூர் அருகே ராணுவ வீரரை தாக்கிய ஏழு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மருத கிராமத்தைச் சேர்ந்த குமரவேல், ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் இருக்கும் அவர், தனது சொந்த கிராமமான மருதூருக்கு வந்தார். இந்நிலையில் குமரவேல், தான் வாங்கிய நிலத்தை பார்வையிட்டு கொண்டிருந்தபோது, அங்கு மாரி என்ற நபர் அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது எனக் கூறி, குமரவேலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மாரி தனது மகன்கள் மற்றும் உறவினரை அழைத்துக்கொண்டு, குமரவேலின் வீட்டிற்கு சென்றார். அங்கு, குமரவேலையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக குமரவேலின் தம்பி மற்றும் தந்தையரும் பலத்த காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாரி மற்றும் அவரது மகன்கள் முனியன், ஏழுமலையான் மற்றும் உறவினரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.