
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் அதிமுக கொள்கை வீரர்களின் கூட்டமாக திகழ்கிறது. பதவி மற்றும் பணத்தை சேர்ப்பதற்காக கட்சியை காட்டிக் கொடுக்க தயாராக இருந்த திரை மறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவும், கற்பனையும் காகித ஓடம் போல கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?. களைகளும் பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா?. விவசாயியும், துரோகியும் தோளோடு தோல் நிற்க முடியுமா? முடியாது என்று முழங்குவது கேட்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னை அடையாற்றில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, ஏதோ லாட்டரி சீட்டு போல குருட்டு யோகத்தில் பதவிக்கு வந்துவிட்டு துரோகத்திற்கு ஒரு சின்னம் போட வேண்டும் என்றால் பழனிச்சாமி தான் என்கிற அளவிற்கு தமிழ்நாட்டில் மக்களுக்கு தெரிந்துள்ளது.
முன்பெல்லாம் துரோகி என்றால் எட்டப்பன் என்று கூறுவோம். அதே மாதிரி வரும் காலத்தில் அவரின் பெயர் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு துரோகி என்றால் பழனிச்சாமி தான் என்று பேசும் அளவிற்கு செயல்படுகிறார். அவரே நான் தான் அந்த துரோகி என்று ஒத்துக் கொண்டுள்ளார் என்று தான் இதை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.