
துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 4.20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி சிரியாவின் எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா, லெபனான், இஸ்ரேல் உட்பட அண்டை நாடுகளிலும் இது உணரப்பட்டுள்ளது.
இதுதான் நூறாண்டுகளுக்குப் பிறகு அப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும். அதாவது அதிகாலை நேரம் வீடுகளில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். குறிப்பாக துருக்கி நாட்டினுடைய காஜியான்டெப், அடானா மாலத்யா, கிளிஸ் ஆகிய நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து கிடக்கின்றன.
சுமார் 1500க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகின்றது. பார்க்கும் திசையெல்லாம் கட்டிட குவியலாகவே காட்சி அளிக்கின்றது. இந்த கட்டிட குவியலுக்குள் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களும் அவர்களுடன் இணைந்து வெறும் கையாலேயே இடிபாடுகளை அகற்றி அதனுள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.