நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் திமுக வார்டு கிளை செயலாராகவும் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார் . மற்றொருவர் குன்னூர் அருகே உள்ள அதிகரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோகி. இவ்ர்கள் இருவரும் சேர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அதே ஊரைச் சேர்ந்த அனிதா, சந்தோஷ் குமார், சதீஷ்குமார், மஞ்சுநாதன் ஆகிய 4 பேரிடம் ரூபாய் 14 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.

ஆனால் எந்த வேலையும் வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை. இதனால் அப்துல் ரஹீம், ஜோகி ஆகிய இருவர் மீதும் குன்னூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.  இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இது தொடர்பான வழக்கு குன்னூர் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் சலாம், குற்றவாளிகள் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 26,34,000 ரூபாய் 2 மாதத்திற்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு குறித்து மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசமும் அளித்துள்ளார்.