இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது..

யு-19 உலகக் கோப்பை மகளிர் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 5.30  மணிக்கு தொடங்குகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை டி20 தொடர் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. தென்னாப்பிரிக்காவில் கடந்த 14ம் தேதி முதல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்தும், நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்தது. பில்மர் 35 ரன்களும், விக்கெட் கீப்பர் இசபெல்லா கேஸ் 26 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து பேட் செய்த இந்திய அணி 14.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்வேதா ஷெராவத் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். சௌமியா திவாரி 22 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இங்கிலாந்து பெண்கள் U19 அணி :

கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ்(கே), லிபர்ட்டி ஹீப், நியாம் ஃபியோனா ஹாலண்ட், செரன் ஸ்மால் (வி.கீ ), ரியானா மெக்டொனால்ட் கே, சாரிஸ் பாவேலி, அலெக்சா ஸ்டோன்ஹவுஸ், சோபியா ஸ்மால், ஜோசி க்ரோவ்ஸ், எல்லி ஆண்டர்சன், ஹன்னா பேக்கர், எம்மா மார்லோ, டேவி சாரா டி பெர்ரின், மேடி கிரேஸ் வார்டு, லிசி ஸ்காட்.

இந்திய பெண்கள் U19 அணி :

ஷஃபாலி வர்மா(கே), ஸ்வேதா செஹ்ராவத், சௌம்யா திவாரி, கோங்காடி த்ரிஷா, ரிச்சா கோஷ்(வி.கீ), ஹிரிஷிதா பாசு, டைட்டாஸ் சாது, மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, சோனம் யாதவ், சொப்பதண்டி யாஷஸ்ரி, ஃபலக் நஸ்ரி, ஷப்னம் எம்.டி., சோனியா மெந்தியா, ஹர்லி காலா.