முன்னாள் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி (COO) ஷெரில் சாண்ட்பெர்க், தனது 26 வயது உதவியாளருடன் ஐரோப்பாவில் பயணித்த போது, இருவருக்கும் ரூ. 11.3 லட்சம் மதிப்புள்ள உள்ளாடைகள் வாங்கியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை முன்னாள் பேஸ்புக் ஊழியர் சாரா வின்-வில்லியம்ஸ் ‘Careless People: A Cautionary Tale of Power, Greed, and Lost Idealism’ என்ற புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் தனிப்பட்ட ஜெட் விமானத்தில் திரும்பும் போது, சாண்ட்பெர்க் தனது உதவியாளரிடம் “விமானத்தில் ஒரே ஒரு படுக்கை மட்டுமே உள்ளது” என்று கூறி, தன்னுடன் சேர்ந்து தூங்க அழைத்ததாகவும், அவர் மறுத்ததையடுத்து கோபமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை மெட்டா நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின் பேச்சாளர், வின்-வில்லியம்ஸ் 8 ஆண்டுகளுக்கு முன்பாக மோசமான செயல்பாடு காரணமாக அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய குற்றச்சாட்டுகள் தவறானது மற்றும் ஆதாரமற்றவை என்று கூறினார்.

மேலும், சாண்ட்பெர்க் தொடர்பாக இந்த தகவல்களை வெளியிடுவதற்கு வின்-வில்லியம்ஸ் பேஸ்புக் எதிர்ப்பு பிரச்சார குழுவால் ஆதரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. அதோடு இந்த புத்தகத்தில் இருக்கும் தகவல்படி மார்க் ஜுக்கர்பெர்க் தனது தொழில்நுட்ப ஆர்வத்தை விட்டுவிட்டு அரசியலில் ஈடுபட மாறிவிட்டதாகவும், சாண்ட்பெர்க் மற்றும் அவர் ‘The Great Gatsby’ கதாபாத்திரங்களைப் போல் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சாண்ட்பெர்க் கடந்த காலத்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தகவல் முறைகேடு வழக்கில் ஈமெயில்களை அழித்த விவகாரம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில், நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்து, சட்ட நடவடிக்கை எடுத்தது. அவர் நிறுவனத்தின் தரவுகளை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருந்தபோதும், தகவல்களை அழித்ததாகவும், தனிப்பட்ட கணக்குகளை தவறான அடையாளத்தில் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த புத்தகம் தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.